Posts Tagged ‘நடுநிலை’

கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில் அடிக்கடி கலாட்டா செய்வது – சரித்திர பாடதிட்டத்தை குறைப்பது சாதாரணமான விசயம் தான் (2)

ஏப்ரல்19, 2023

கம்யூனிஸ, இடதுசாரி, முஸ்லிம் போன்ற குழுக்கள் சரித்திரம் என்ற போர்வையில் அடிக்கடி கலாட்டா செய்வதுசரித்திர பாடதிட்டத்தை குறைப்பது சாதாரணமான விசயம் தான் (2)

சிலபஸ் குறைப்பு-அதிகரிப்பு போன்றவை சாதாரண விசயங்கள்: “என்சிஇஆர்டி நிபுணர்களைக் கொண்ட பெரிய அமைப்பு. என்சிஇஆர்டி எந்த மாற்றங்களைச் செய்தாலும் அது பொதுவாக கல்வி அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகின்றன. வரலாற்றில் யாரேனும் தனது சொந்த சித்தாந்தத்தை வைத்தால் அது அகற்றப்பட வேண்டும். ஆனால் முகலாய வரலாறு உலகளாவிய வரலாறு, அதை முழுமையாக அகற்ற முடியாது. அது சீராக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடும்,” என்று பாஜகவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் முன்னாள் என்சிஇஆர்டி தலைவர் ஜே.எஸ்.ராஜ்புத் கூறினார். “வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில பகுதிகள் விட்டுப்போய்விட்டனவா என்று ஆராயப்படுகிறது. முகலாயர் கால வரலாறு அதிகம் கற்பிக்கப்பட்டது என்று நானும் நினைக்கிறேன். ​​​​முகலாயர் காலத்தில் மட்டுமே இந்தியா இருந்தது, அதைத் தவிர வேறெப்போதும் இருந்ததில்லை என்று அதை படிக்கும்போது தோன்றும். இப்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படும் புத்தகங்களில் இவை அனைத்தும் கவனிக்கப்படுகின்றன,’என்றார் அவர்.

இடதுசாரிகளின் ஒத்துழையாமை மற்றும் அவர்களின் பழமைவாதம்: முகலாயர்கள் இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய அங்கம், அவர்களை புத்தகங்களில் இருந்து நீக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக குறைக்க முடியும் என்று ஜே.எஸ்.ராஜ்புத் கருதுகிறார்.”1970 க்குப் பிறகு, இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் அமைப்புகளில் செல்வாக்கு பெற்றனர். இந்த செல்வாக்கைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று 1999 மற்றும் 2004 க்கு இடையில் NCERT தலைவராக இருந்த ஜேஎஸ் ராஜ்புத் குறிப்பிட்டார். இந்த வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான பாடம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. “எனது பதவிக்காலத்திலும் புத்தகங்களை சீராக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் அந்த நேரத்தில் இறுதி முடிவை புத்தகத்தின் எழுத்தாளர்களிடம் விட்டுவிட்டோம். அவர்கள் மாற்றத்திற்கு தயாராக இல்லை. பின்னர் புதிய எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.” என்றார் அவர்.

நடுநிலையோடு தான் சிலபஸ் குறைக்கப் பட்டுள்ளது: புத்தகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த சர்ச்சைக்குப் பிறகு என்சிஇஆர்டியின் நன்மதிப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்காக என்சிஇஆர்டி இத்தகைய மாற்றங்களைச் செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. “இதுபோன்ற சர்ச்சைகளால் பாதிக்கப்படாத அளவிற்கு என்சிஇஆர்டியின் நன்மதிப்பு மிகவும் அதிகம். என்சிஇஆர்டி என்ன செய்தாலும், அதை சிந்தித்தே செய்கிறது. இந்தியாவில் இடதுசாரி சித்தாந்தத்தின் தாக்கம் அமைப்புகள் மீது உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். அது குறைக்கப்பட்டால் அந்த முயற்சிகளுக்கும் ஆதரவு கிடைக்கும். பலர் இந்த மாற்றங்களை வரவேற்கிறார்கள்,”என்று ராஜ்புத் கூறுகிறார்.

அடுத்த தலைமுறை அழிக்கப்படுகிறது: ஆனால் புத்தகங்களில் செய்யப்படும் இந்த மாற்றங்களை, முகலாய வரலாற்றை இந்தியாவில் இருந்து அழிக்கும் முயற்சியாக பலர் பார்க்கிறார்கள்.”வரலாறு மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு கற்பிப்பதை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று சில காலத்திற்குப் பிறகு உணரப்படுகிறது. மாற்றங்களை செய்வது பெரிய விஷயமல்ல. அவை தொடர்ந்து நடக்கின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் எப்போதும் உண்மைகளின் அடிப்படையில் நடக்கின்றன. புதிய தகவல்களின் அடிப்படையில் நிகழ்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த பல ஆண்டுகளாக நம் வரலாற்றை நம் விருப்பப்படி எழுத முயற்சி நடக்கிறது. ஒரு வகையில் வரலாறு படிப்படியாக அழிக்கப்பட்டு கட்டுக்கதைகள் அதன் இடத்தை ஆக்கிரமிக்கின்றன,” என்று இந்திய வரலாற்று காங்கிரஸின் செயலாளரும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியருமான சையத் அலி நதீம் ரெசாவி குறிப்பிட்டார்.

“2014 க்கு பிறகு, வரலாற்றுக்கு வித்தியாசமான கண்ணோட்டத்தை அளிக்க மீண்டும் மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில், வரலாற்று புத்தகங்களை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த மாற்றங்கள் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்பட்டது. இப்போது ஒரு கற்பனை வரலாற்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்றார் அவர். முகலாயர்களின் வரலாறு, புத்தகத்தில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தொடர்பான விஷயங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற என்சிஇஆர்டியின் வாதத்தை பேராசிரியர் ரெசாவி நிராகரிக்கிறார். “வரலாற்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தை நீக்க முடியாது. இப்படி செய்தால், குழந்தைகளுக்கு தவறான வரலாற்றை கற்பித்து, தவறான தகவல்களை வழங்குகிறீர்கள் என்று பொருள். இது நடந்தால் சமூகத்திலும் இது ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களின் குற்றச்சாட்டு: என்சிஇஆர்டியின் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து முகலாய மன்னர்களின் வரலாற்று பகுதி பாடம் நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், 11-ம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இஸ்லாமியர்களின் எழுச்சி மற்றும் கலாச்சார மோதல் தொடர்பான பகுதிகளை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்தப் பாடத் திட்டங்களை நீக்கக்கூடாது எனபலர் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்[1]. இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறும்போது, “மோடி அரசாங்கம் வரலாற்றுப் பாட நூல்களில் இருந்து முகலாய வரலாற்றை நீக்குகிறது. மேலும் இந்தியாவின் தற்போதைய வரலாற்றை சீனா அழித்துக் கொண்டிருக்கிறது” என்றார்[2].

மஹாராணா பிரதாப்பை ஹீரோவாக்க முயற்சிக்கிறார்கள்: புத்தகத்தில் இருக்கும் முகலாயர்கள் தொடர்பான பகுதி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். “அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளை வைத்திருக்கிறார்கள். முகலாயர்கள் இந்துக்களுடன் சண்டையிட்டதை வைத்திருக்கிறார்கள், ஆனால் முகலாயர்கள் இந்த சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப பணியாற்றினார்கள் என்று காட்டும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார். “மஹாராணா பிரதாப்பை ஹீரோவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவரை மட்டுமே வைத்து அவரை ஹீரோவாக்க முடியாது. அக்பரின் இருப்பு அங்கு அவசியம். எனவே அங்கு அக்பர் இருக்கிறார். ஆனால் அக்பர் பின்னாளில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு, சகிப்புத்தன்மை கொண்ட சமூகத்தை உருவாக்கினார் என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது,” என்று பேராசிரியர் அலி நதீம் ரெசாவி சுட்டிக்காட்டினார்.

என்.சி..ஆர்.டி.,யின் விளக்கம்: பிளஸ் 2 வரலாற்று பாட புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்[3]. இப் பாட புத்தகத்தில் திருத்தங்கள் செய்வதாக என்.சி.இ.ஆர்.டி., என்ற கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அறிவித்தது[4]. இதன்படி வரலாற்று பாட புத்தகத்தில் முகலாயர்கள் தொடர்பான சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன[5]. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் முகலாயர் தொடர்பான வரலாற்றை மாற்றி எழுத மத்திய அரசு முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன[6]. இது குறித்து என்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறியதாவது[7]: “பள்ளிக் கல்வி பாடதிட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளை என்.சி..ஆர்.டி., வழங்கி வருகிறது[8]. கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் பல பிரச்னைகளை சந்தித்தனர். பாடதிட்டங்கள் அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன. அதன்படியே பாடதிட்டங்கள் திருத்தப்பட்டன. பாடங்களின் அளவைக் குறைக்கவும், படிப்பதற்கு சுலபமாக இருக்கவும் ஒரே தகவல் பல இடங்களில் வருவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்தாண்டே 2022, அறிவிப்பு வெளியிட்டு நிபுணர்கள் உதவியுடன் பாடதிட்டங்கள் திருத்தப்பட்டன. மாணவர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விளக்கம் கடந்தாண்டே அளிக்கப்பட்டது. அந்த மாற்றங்களை சி.பி.எஸ்.., எனப்படும் மத்திய கல்வி வாரியம் தற்போது செய்துள்ளது. இதற்காக புதிய பாட புத்தகங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. கடந்தாண்டு திருத்தப்பட்டவையே தற்போதும் தொடர்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்தும் வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை[9]. அதுபோன்ற எந்த அரசியல் எண்ணமும், நிபுணர் குழுவுக்கு இல்லை,” இவ்வாறு அவர் கூறினார்[10].

2022லேயே வெளியிட்டபோது, யாரும் கண்டுகொள்ளவில்லை: கொரோனாவால் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதித்திருக்கும் நிலையில், அதிக அளவிலான பாடங்களின் சுமையை குறைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது[11]. குறைந்த பாடங்கள் கொண்ட பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பணிகள் அடிப்படையில், சிலபஸ் மற்றும் பாடநூல்களின் பாடங்கள் குறைக்கப்படும் எனத் தெரிகிறது[12].

© வேதபிரகாஷ்

19-04-2023


[1] தமிழ்.இந்து, முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்படவில்லைஎன்சிஇஆர்டி தலைவர் விளக்கம், செய்திப்பிரிவு, Published : 06 Apr 2023 07:06 AM, Last Updated : 06 Apr 2023 07:06 AM.

[2] https://www.hindutamil.in/news/india/971698-courses-on-mughals-not-scrapped-ncert-chairman-explains.html

[3] தமிழ்.இந்து, வரலாறு பாடப் புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படவில்லை: NCERT, செய்திப்பிரிவு, Published : 04 Apr 2023 07:33 PM Last Updated : 04 Apr 2023 07:33 PM.

[4] https://www.hindutamil.in/news/india/970870-ncert-chief-denies-dropping-chapters-on-mughals-says-rationalisation-1.html

[5] தமிழ்.ஏபிபி.லைவ், CBSE Syllabus: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பாடம் நீக்கம்; என்சிஇஆர்டி அறிவிப்பு, By: மாய நிலா | Updated at : 04 Apr 2023 12:06 PM (IST), Published at : 04 Apr 2023 12:02 PM (IST).

[6] https://tamil.abplive.com/education/mughals-now-out-of-syllabus-for-class-12-cbse-up-board-students-110094

[7] தமிழ்.ஒன்.இந்தியா, விடுபட்ட முகலாயர் வரலாறு.. வெடித்த சர்ச்சைகள்.. பாடத்திட்டத்தில் திருத்தமா?.. என்சிஇஆர்டி விளக்கம், By Halley Karthik, Published: Wednesday, April 5, 2023, 8:21 [IST].

[8] https://tamil.oneindia.com/news/delhi/ncert-director-s-explanation-regarding-removal-of-history-of-mughals-from-cbse-s-new-syllabus-505946.html

[9] தினமலர், முகலாயர் பாடம் திருத்தம்; என்.சி..ஆர்.டி., விளக்கம், மாற்றம் செய்த நாள்: ஏப் 05,2023 06:00.

[10] https://m.dinamalar.com/detail.php?id=3285478

[11] புதியதலைமுறை, பள்ளி மாணவர்களின் பாடச்சுமைகளை குறைக்க என்சிஇஆர்டி முடிவு, Veeramani, Published on :  28 Dec, 2021, 8:45 am

[12] https://www.puthiyathalaimurai.com/employment-news-in-tamil-latest-update/ncert-decides-to-reduce-the-syllabus-load-of-school-students